தாய்வானில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 72 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாய்பேயிலிருந்து டைடுங் நோக்கி பெருமளவான சுற்றுலா பயணிகளுடன் பயணித்த தொடருந்து ஒன்றே கிழக்கு தாய்வானிலுள்ள ஹுலியன் பிரதேசத்தில் இன்று காலை விபத்துக்குள்ளானதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தொடருந்து பாதைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்தில் மோதியதால் சுரங்கம் ஒன்றுக்குள் தொடருந்து பெட்டிகள் தடம்புரண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தொடருந்தின் முன்பகுதி சுரங்கத்துக்கு வெளியில் காணப்பட்டபோதிலும், அதன்பெட்டிகள் சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டுள்ளன.
தொடருந்து பெட்டிகள் சுரங்கத்துக்குள் நொருங்கிக் கிடப்பதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தொடருந்தில் மொத்தமாக சுமார் 350 பேர் பயணித்துள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
முதல் நான்கு பெட்டிகளில் பயணித்த 80 முதல் 100 வரையான பயணிகள் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 8 தொடருந்து பெட்டிகளும் கடும்சேதமடைந்திருப்பதால் அதிலுள்ள பயணிகளை மீட்க பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்படி கனரக வாகனம் உரிய முறையில் நிறுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் அது பகுதியளவில் தொடருந்து பாதையில் இருக்கும்படியாக நிறுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.