தனது சகோதரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துபவர்கள், தைரியமிருந்தால் தன் வீட்டில் வந்து சோதனை நடத்தட்டும் என்று உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் இல்லத்திலும், அவரது கணவனின் அலுவலகம், அவரது நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.
மேலும், திருவண்ணாமலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை வீட்டிலும், கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட 4 இடங்களிலும், வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.
திமுகவினரை குறிவைத்து இந்த சோதனைகள் இடம்பெற்று வரும் நிலையில், ஜெயங்கொண்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய ஸ்டாலின்,
” வருமான வரித்துறை, சிபிஐ போன்றவற்றை வைத்து மிரட்டுகிறார்கள். இது திமுக என்பதை மறந்து விடாதீர்கள். நான் கருணாநிதியின் மகன். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, உடுமலையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி, “எனது சகோதரி செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.
என் வீட்டு முகவரியைத் தருகிறேன். தைரியமிருந்தால் என் வீட்டுக்கு வருமான வரி சோதனைக்கு வாருங்கள் சவால் விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.