மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு, மன்னாரில் இன்று இரண்டாவது நாளாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பேரணியாக நேற்று மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட ஆயரின் திருவுடல், அங்குள்ள சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தொடக்கம், அங்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் இன, மத பேதமின்றி மறைந்த ஆயருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கத்தோலிக்க மதகுருக்கள், அருட்சகோதரிகளும், பாடசாலை மாணவர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நாளை மாலை மூன்று மணியளவில் ஆயரின் பூதவுடல் மன்னார் ஆயர் இல்லத்திலிருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
திங்கட்கிழமை மதியம் இரண்டு மணி வரை பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும்,
அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மாலை மூன்று மணியளவில் பேராலயத்தில் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்து, திருவுடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.