சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த சாட்சியங்கள், தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்து ஆவணப்படுத்தும் பணியகத்தை உருவாக்குவதற்குத் தேவையான நிதியை வழங்குவதற்கு அவுஸ்ரேலியாவும், நோர்வேயும் முன்வந்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சிறிலங்காவில் நடந்த மீறல்கள் குறித்த சாட்சியங்கள், தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்து ஆவணப்படுத்தும் பணியகத்தை உருவாக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
12 நிபுணர்களைக் கொண்ட இந்த பணியகத்தை உருவாக்கி, அதன் பணிகளை முன்னெடுப்பதற்கு, 2.85 மில்லியன் டொலர் நிதி தேவைப்படும் என்று ஐ.நாவின் திட்டமிடல் பிரிவு மதிப்பீடு செய்துள்ளது.
இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக இந்த செலவினங்களை ஈடுசெய்ய முடியாது என்பதால், வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீட்டை கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சீனா, ரஷ்யா உள்ளிட்ட நட்பு நாடுகளின் உதவியுடன் . ஐ.நா பொதுச்சபையில் இந்த நிதி ஒதுக்கீட்டு முயற்சியை தோற்கடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீவிரமான இராஜதந்திர முயற்சிகளில் இறங்கியுள்ளது.
இந்தநிலையில், ஐநா பொதுச்சபையில் நிதி ஒதுக்கீட்டு முயற்சி தோல்வியடைந்தால், நோர்வேயும், அவுஸ்ரேலியாவும் அதற்கான நிதியை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், ஐ.நா பொதுச்சபையில் நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்படும் நிலை ஏற்படாது என்றும் அந்த வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.