சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்க மறுத்த சிறிலங்கா மருந்துகள் ஒழுக்கமைப்பு அதிகாரசபையின் ஏழு உறுப்பினர்கள், சுகாதார அமைச்சரால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று ஜேவிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ குற்றம்சாட்டியுள்ளார்.
“சிறிலங்கா மருந்துகள் ஒழுக்கமைப்பு அதிகாரசபையின் நிபணர் குழு சினோபார்ம் கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வுக்குட்படுத்தி அதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது.
இந்த தடுப்பு மருந்து குறித்த தேவையான தகவல்களை சீன உற்பத்தியாளர் வழங்காததே இதற்கு காரணம்.
11 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு நிபுணர் குழு சீன நிறுவனத்திடம் கேட்டிருந்த போதும், ஒரே ஒரு கேள்விக்கான பதிலே அளிக்கப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவுக்குத் தேவையான தகவல்களை சீனா வழங்கத் தவறியுள்ளது.
இதனால் அந்த மருந்துக்கு சிறிலங்கா மருந்துகள் ஒழுக்கமைப்பு அதிகாரசபையின் நிபுணர் குழு அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து நிபுணர் குழுவில் உள்ள 7 உறுப்பினர்களை சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தினால் அனுமதிக்கப்படாத இந்த மருந்தைப் பயன்படுத்தினால், நீண்ட கால குறுகிய கால பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.
மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று அரசாங்கத்தை எச்சரிக்கிறோம்.
அரசாங்கத்தின் அமைச்சர்களின் அகங்காரத்திற்கு மக்கள் இரையாகக் கூடாது, ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மக்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல் உலக சுகாதார நிறுவனத்தினால் அனுமதிக்கப்படாத சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்தை சிறிலங்கா அரசாங்கம் நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்று, குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் குற்றம்சாட்டியுள்ளார்.