தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் இன்று துக்கதினம் கடைப்பிடிக்கப்படுவதுடன், வீடுகள், வர்த்தக நிலையங்களில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
மறைந்த மன்னார் மறை மாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் நல்லடக்கம் இன்று நடைபெறுகின்ற நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், தமிழ் தேசியத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், இன்றைய நாளை, தமிழ் தேசிய துக்கநாளாக 18 தமிழ் சிவில் அமைப்புகள், பிரகடனம் செய்திருந்தன.
இந்த நிலையில், இன்று வீடுகளிலும் பொது இடங்களிலும், வணிக நிலையங்களிலும் கறுப்புக் கொடிகளை பறக்க விடப்பட்டிருப்பதுடன், பொதுமக்கள் உடைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்று மன்னார் மாவட்டத்தில், போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை என்பதுடன், மன்னார் நகரில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால் நகரப் பகுதிகள் வெளிச்சோடிக் காணப்படுகின்றன.
அதேவேளை, தமிழர் தாயகப் பகுதிகளில் மறைந்த ஆயருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் பரவலாக இடம்பெற்று வருகின்றன.
வவுனியா- இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் இன்று காலை, இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆண்டகையின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டன.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் மறைந்த ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகைக்கு அஞ்சலி நிகழ்வு இன்று காலை புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கத்தோலிக்க, கிறிஸ்தவ, இந்து மத தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.