பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடைவிதிக்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்ன கொரயா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த மனு இன்று ஆராயப்பட்டது.
இதன்போது மனு தொடர்பான விசாரணைகளை மே மாதம் 5 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதுடன், பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்கமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பள நிர்ணய சபையினால் தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள், பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆகியவற்றுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து மார்ச் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு 900 ரூபா அடிப்படை சம்பளம், 100 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவும் அடங்களாக நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா சம்பளத்தை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள 20 பெருந்தோட்டக் கம்பனிகள் அந்த வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.