அமெரிக்காவில் செப்ரெம்பர் 11 தாக்குதல் குறித்து விசாரித்த ஆணைக்குழு போன்று, இலங்கையிலும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணை அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே அளித்த முறைப்பாட்டுக்கு அமைய, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்குச் சென்றிருந்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“செப்ரெம்பர் 11 தாக்குதல் குறித்து விசாரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஆணைக்குழுவை அமைத்திருந்தார். அந்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனநாயக கட்சி ஜனாதிபதி பராக் ஒபாமா நடைமுறைப்படுத்தினார்.
அந்த விசாரணைகள் தான், ஒசாமா பின்லேடன் எவ்வாறு தாக்குதலுக்கு திட்டமிட்டு செயற்படுத்தினார் என்று விரிவான புலனாய்வு தகவல்கள் வழங்கியிருந்தது.
அவர் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைக்கும் அதுவே காரணமாக அமைந்தது. அமெரிக்காவில் நடந்தது போன்ற விசாரணைகளே இலங்கையிலும் நடக்க வேண்டும்” என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.