அரசாணை அறிவிப்பின் படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபாவை வேதனமாக வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒழுங்கமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக நிர்ணயித்து, வேதன நிர்ணய சபை தீர்மானம் நிறைவேற்றியமைக்கு அமைய, தொழில் அமைச்சினால் அதுதொடர்பான அரசாணை வெளியாக்கப்பட்டது.
இந்த அரசாணையை இரத்து செய்யக் கோரி பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளன.
இந்த மனுமீதான விசாரணை நேற்று இடம்பெற்ற போது, குறித்த வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு நிறுவனங்கள் தரப்பில் கோரப்பட்ட போதும், அதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது.
அத்துடன் இந்த மனு தொடர்பான மேலதிக விசாரணைகள் அடுத்த மாதம் 5ஆம் மற்றும் 17ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
இந்தநிலையில் நீதிமன்றின்ற உத்தரவுக்கு அமைய, அரசாணையின் படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபா வேதனத்தை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒழுங்கமைப்பு அறிவித்துள்ளது.