ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, நாடு ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார்.
“ஐ.நா மனித உரிமை பேரவையின் விசாரணை பொறிமுறை தொடர்பாக மாற்றுக் கருத்துக்கள் எவையும் இருக்கக் கூடாது.
ஜெனிவா நிகழ்ச்சி நிரலில் இருக்கின்ற நாம், அச்சுறுத்தல்கள் குறித்து யதார்த்தபூர்வமாக சிந்தித்து, என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எமது கருத்தினை முன்வைப்பதற்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்காது. நாங்கள் பொறுப்புக்கூறல் விடயத்தை திறந்த மனதுடன் அணுக வேண்டும்.
முன்னைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்தில் இருந்து சிறிலங்கா விலகிக் கொண்டது பொருத்தமற்றது.
சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் சிறிலங்காவை கொண்டு செல்ல முடியாது என்பதற்காக, இந்த விடயங்களை அலட்சியப்படுத்த முடியாது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை சகிக்க முடியாத உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளே சிறிலங்காவை இலக்கு வைக்கின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.