நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பில் கூட்டு சமஷ்டி முறை உள்வாங்கப்பட வேண்டும் என புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர் குழுவிடம் விக்னேஸ்வரன் எடுத்துரைத்துள்ளார்.
சிறிலங்காவில் சிங்கள மக்களை போன்று தமிழ், முஸ்லிம் மக்களும் வாழவேண்டும் என்றால் கூட்டு சமஷ்டி முறை தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர் குழுவினரை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் கொழும்பில் சந்தித்து அரசியல் அமைப்பு உருவாக்க செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சியின் கீழ் பெரும்பான்மை சிங்கள மக்கள் முழுமையான அதிகாரங்களை தமக்குக் கீழ் வைத்துக்கொண்டு இந்த நாட்டின் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இதுவே கடந்தகால முரண்பாடுகளுக்கு பிரதான காரணமாகவும் அமைந்துள்ளது.பொருளாதார ரீதியில் நாடு பின்னடைவை சந்திக்கவும் இதுவே பிரதான காரணமாகும்.
இந்த நாடு பல்லின, பல மதங்களை கொண்ட பல்லினத்தன்மை கொண்ட நாடாகும். இலங்கை -இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது கூட அரசாங்கம் இதனை ஏற்றுக்கொண்டது.
எனவே அரசாங்கம் இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு சகலரும் இணைந்து பயணிக்கும் வழிமுறையை கையாள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.