யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆயிரத்து 3 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, முடிவுகள் நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 129 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் 88 பேர், திருநெல்வேலி பாற்பண்ணை பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
குறித்த பிரதேசம் கடந்த இரண்டு வாரங்களாக முடக்கப்பட்ட நிலையில் உள்ளது.
அதேவேளை, சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேருக்கும், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 26 பேருக்கும், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இந்த தொற்றாளர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நேற்று காலையும் மாலையும், வெளியாகியிருந்த முடிவுகளுக்கமைய, மேலும் 79 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.