யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும் வெற்றிலை துப்பினால் 2ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிவித்தார்.
அத்தோடு, இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, குறித்த காவல் படையினர் நேற்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.
மேலும் காவல் படையின் ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் குறித்த காவல் படையின் சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் காவல் துறை சீருடைகளை ஒத்த சீருடை என காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகக் கூறப்படுகிறது.