தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்குள் அடாத்தாக புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலில், மாணவர்கள் சிலர் காயமடைந்து, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் மிதிவண்டிகளை நிறுத்தும் இடம், தமக்கு சொந்தமானது எனவும், அங்கு மிதிவண்டிகளை நிறுத்த வேண்டாம் எனவும் கூறியே, அமெரிக்கன் மிஷனை சேர்ந்தவர்கள், இன்று காலையில் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில், குறித்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என மாகாண கல்வித் திணைக்களத்தினால் மூன்று வருடங்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தப்பட்டு பாடசாலையிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொழும்பில் இருந்து வந்திருந்த அமெரிக்கன் மிஷனை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சிலர், மாணவர்கள் மிதிவண்டிகளை நிறுத்தும் இடத்திற்கு செல்ல முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
எனினும், மாணவர்கள் மிதிவண்டிகளை உள்ளே நிறுத்திய போதே, அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.