நிகழ்நிலைப் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கும் இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகளின் காவல்துறை தலைமை அதிகாரிகளுக்கிடையில் நடத்தப்பட்ட முதலாவது மெய்நிகர் பேச்சுக்களிலேயே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இந்திய தரப்புக்கு ஐபி எனப்படும், இந்தியாவின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அரவிந்த் குமாரும், சிறிலங்கா தரப்புக்கு காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்னவும் தலைமை தாங்கியுள்ளனர்.
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான குறுகிய கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தல், மற்றும் ஏனைய ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நிகழ்நிலை புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வதன் அவசியம் இருதரப்பினாலும் வலியுறுத்தப்பட்ட நிலையில், அதற்கும் உடன்பாடு காணப்பட்டது.
உலகளாவிய பயங்கரவாத அமைப்புகள், எங்கிருந்து செயற்பட்டாலும், அவர்களுக்கு எதிராக கூட்டாக இணைந்து செயற்படுவதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அவசர பாதுகாப்புச் சவால்களை காத்திரமான முறையில் கையாளுவதற்கு, சரியான நேரத்தில் செயற்படக் கூடிய புள்ளிகளை அடையாளம் கண்டு தற்போதுள்ள ஒத்துழைப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும் இந்த சந்திப்பின்போது இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.