சிறிலங்கா காவல்துறையினரின் அராஜகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நேற்று இரவு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதன் பின்னர், நீதிமன்ற கட்டடத் தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
“இன்றைய நாள் சட்டம், ஒழுங்கு துறைக்கு கரிநாள்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு ஊறு விளைவுக்கும் அதிகாரம் சிறிலங்கா காவல்துறையினருக்கு இல்லை.
இந்த அராஜகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்.
எங்களுடைய அதிகாரத்தை, இந்த நாட்டை, யாழ். நகரை தூய்மையாக வைத்திருக்க முயன்றது தவறா?
தவறு என்றால் அந்தத் தவறை தொடர்ந்தும் செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்” என்றும் மாநகர முதல்வர் மணிவண்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.