உண்மையை உரத்துச் சொன்னதால் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது சகாக்களும் என் மீது விமர்சனங்களை முன்வைத்தாலும், அவர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டியவர்கள் என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
“ சிறிலங்காவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் மிக மோசமான தாக்குதலே ஈஸ்டர் தாக்குதல்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் குற்றவாளி என்று பெயரிட்டுள்ளது.
நாட்டின் தலைவர் என்ற ரீதியில், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அவரே இந்தத் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்.
அவர் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டதால் தான் அவரைக் குற்றவாளி என்று விசாரணைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதனால்தான் அவர் மீது உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை நான் கோருகின்றேன்.
உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில், பரிகாரம் கிடைக்க வேண்டுமெனில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
எனவே தான்,ஜனாதிபதி விசாரணை அறிக்கையில் குறிப்பிட்ட பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்துமாறு அரசிடம் நான் கோருகின்றேன்.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவர் மீதும் அரசு உடன் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.