யாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்டபோதிலும் தொடர்ந்து முடக்கத்திலேயே உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
திருநெல்வேலி சந்தை வியாபரிகள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த 28ஆம் திகதி முதல் சந்தை மற்றும் அங்குள்ள வியாபர நிலையங்கள் ஆகியன சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய மூடப்பட்டன.
பாரதிபுரம் மற்றும் பாற்பண்ணை பகுதிகளை தவிர ஏனைய பிரதேசங்கள் விடுவிக்கப்படும் என வட.மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலாளர் ஆகியோர் அறிவித்திருந்தனர்.
ஆனால் இன்று மதியம் வரை குறித்த பகுதிகள் விடுவிக்கப்படாமல், காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருக்கின்றனர்.
மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர் மாத்திரமே பிரதேசத்தில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக காவல்துறையினர், இராணுவத்தினர் கூறியுள்ளதாவது, தங்களுக்கு குறித்த பகுதிகளை விடுவிப்பதாக எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்