யாழ்ப்பாணத்தில் நேற்று மேலும் 39 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நகரில் சந்தை, கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 22 பேருக்கும், நகர கொத்தணியில் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடைய 12 பேருக்குமே, தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யாழ். நகரின் புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 22 பேர் சார்ந்த ஆறு வர்த்தக நிலையங்கள் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்புக்கமைய மூடப்பட்டுள்ளன.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேருக்கும் மன்னாரில் இருவருக்கும் வவுனியாவில் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் 417 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற 5 பேருக்கு கோரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் எழுமாறாக பெறப்பட்ட சிலரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் இரண்டு பேருக்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த ஒருவருக்கும், கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பருத்தித்துறை சுகாதார அதிகாரி பிரிவில் உள்ள புலோலி வட கிழக்கைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவர் கொரோனா தொற்றினால் நேற்று மரணமடைந்துள்ளார்.
நீரிழிவு நோயாளியான அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மேலதிக சிகிச்சைக்காக முல்லேரியா ஆதார மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.