சீனாவினால் நிர்மாணிக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ‘பணச் சலவை’ மோசடியின் புகலிடமாக மாறும் ஆபத்து உள்ளதாக அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் எச்சரித்துள்ளார்.
துறைமுக நகரத்தின் நெகிழ்வுத் தன்மையான வர்த்தக விதிகளை, மோசமான சக்திகள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்புத் துறைமுக ஆணைக்குழு வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள வரிச் சலுகைகள், வரி அற்ற சம்பள முறைகள் மற்றும் வெளிநாட்டு நிதியை அனுமதிக்கும் ஒழுங்குகள் தொடர்பாக, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
துறைமுக நகரம் தொடர்பான சட்டங்கள், அதன் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மிகக் கவனமாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மற்றும் பண மோசடியில் ஈடுபடுபவர்கள் இந்த வணிகச் சூழலைப் பயன்படுத்தி, மோசமான நடவடிக்கைகளுக்கான புகலிடமாக அமைத்துக் கொள்ளும் அபாயம் இருப்பதாகவும், இதனைத் தடுக்கும் விதமான சட்ட ஏற்பாடுகள் அவசியம் எனவும் அலெய்னா டெப்லிட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.