பிலவ வருடப் பிறப்பை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் உள்ள ஆலயங்களில் இன்று அதிகாலையில் சிறப்பு வழிபாடுகள், உற்சவங்கள் இடம்பெற்றுள்ளன.
கொரோனா தொற்று சூழலில் மக்கள், சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி ஆலய வழிபாடுகள், மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிறந்துள்ள பிலவ வருடப் பிறப்பை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழ் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கிறார்கள். என்னதான் துன்பங்கள், இடையூறுகள் வந்தாலும் எமது மக்கள் நம்பிக்கையை இழக்காது, ஜனநாயக வழியில் இறுதி வரை போராடி உரிமைமையை வென்றெடுப்போம். இந்த நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் ஓரணியில் பயணிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
அதேவேளை, பிறந்துள்ள புத்தாண்டில் அனைவருக்கும் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிட்ட பிரார்த்திப்பதாகவும், அனைவரும் வீட்டுத் தோட்டங்களை அமைக்க இந்த வருடத்தில் உறுதி பூண வேண்டும் என்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
சிறிலங்கா தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்,
சிறிலங்காவில் இன விடுதலைக்காகவும்,தமிழ் தேசத்தின் விடுதலைக்காகவும் தினமும் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போன்று, சித்திரைப் புத்தாண்டையும் திடசங்கற்பத்தோடு புத்தெழுச்சியுடன் கொண்டாடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணன் தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில், மலரும் பிலவ வருடம் நோய் நொடிகளில் இருந்து விடுபட்டு தமிழ்மக்கள் உரிமைகளைகளையும் சுபீட்த்தையும் மேன்மையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.