இந்திய மீனவர்களுக்கு, சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்குவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளிப்படையாக கூறுவதானது, தமிழக மக்களுக்கும், தாயக மக்களுக்கும் இடையே முறுகல் நிலையை ஏற்படுத்தக்கூடிய சூழலையே உருவாக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ள்ஸ் தேவானந்தா, இந்திய அரசாங்கத்துடன் இணைந்து, பேச்சுவார்த்தை நடத்தி, ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான வசதியை இருதரப்பு மீனவர்களுக்கும் ஏற்படுத்தும்போது, எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை தீரும் என்றும் ஆலோசனை முன்வைத்துள்ளார்.
இந்த யோசனையானது தாயக மீனவர்களுடன் கலந்தாலோசிக்காது முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் அமைச்சரின் யோசனை அமுலாக்கப்பட்டால் வேண்டாத குழப்பங்கள் உருவாகும். ஆகவே அமைச்சரின் யோசனையை அனுமதிக்க முடியாது என்றார்.