கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிடம் கையளிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை தந்திரமான முறையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, சீனாவின் அதிகாரத்தின் கீழ் அதனை கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்று இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் தெரிவித்துள்ளார்.
அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், இலங்கையின் கடல்பகுதியை நிரப்பி உருவாக்கப்பட்டுள்ள 1100 ஏக்கர் கொண்ட துறைமுக நகர நிலப்பரப்பு சீனாவின் அதிகாரத்தின் கீழ் போய்விடும் என்பதுடன், அந்த விடயத்தில் நாடாளுமன்றத்தினாலும் தலையிட முடியாது போகும் என்று விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
1933 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மொன்டிநீக்ரோ பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று தனிநாடொன்றுக்கான அனைத்து அம்சங்களும் குறித்த ஆணைக்குழு சட்டமூலத்தில் இருப்பதாகவும், இதன்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சனத்தொகை, நிரப்பரப்பு என்பன துறைமுக நகரத்தில் இருக்கும் என்பதுடன், தனியான நிர்வாக பிரிவும் இருக்கும் எனவும் இதன்மூலம் தனியான நாட்டை ஒத்ததாகவே அந்த நகரம் அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு சீனாவின் கட்டுப்பாட்டில் அந்த நகரம் இருக்கும் போது, அங்கு ஏதேனும் பொருளை கொள்வனவு செய்து வெளியேறும் போது அதற்கான வரியை செலுத்த வேண்டி ஏற்படலாம் என்றும் விஜேதாச குறிப்பிட்டுள்ளார்.