மும்பையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலையடுத்து, அங்குள்ள இரண்டு, ஐந்து நட்சத்திர விடுதிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 80 சதவீதம் நிரம்பி விட்டன.
தீவிர சிசிக்சைப் பிரிவு மற்றும் செயற்கைச் சுவாச வசதியுள்ள படுக்கைகளில் 98 சதவீதம் நிரம்பி விட்டன.
இதையடுத்து, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட, அறிகுறி இல்லாத நோயாளிகளைத் தங்கவைத்து சிகிச்சை அளிப்பதற்கு 5 நட்சத்திர விடுதிகள் இரண்டை மும்பை மாநகராட்சி பெற்றுள்ளது.
கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள நட்சத்திர விடுதிகளில் இன்று முதல் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
உணவு, தங்குமிட வசதியுடன் இங்கு சிகிச்சை பெற 4 ஆயிரம் ரூபா கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், மருந்து செலவுகள் தனியாகக் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால்,.6 ஆயிரம் ரூபா செலவில், இருவர் தங்கும் அறைகளை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.