முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் என நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த விவசாயிகள் நேற்று மாலை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயலுக்கு சென்ற இவர்கள் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவர்களைத் தேடிச் சென்றபோது அவர்கள் மூவரும் சடலமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று இரவு 10 மணியளவில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் குமுழமுனை மேற்கு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய கணபதிப்பிள்ளை மயூரன், குமுழமுனை மத்தி பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சுவர்னன், வற்றாப்பளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய சுஜீவன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு – படுவாங்கரைப் பிரதேசத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மலையர்கட்டு கிராமத்திலும் விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான நல்லதம்பி மோகனசுந்தரம் எனும் விவசாயி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.