சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பு சிறிலங்காவின் அரசியலை தீர்மானிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அவர்கள் வெறுமனே வியாபார நாடாக மாத்திரம் இலங்கையை பார்க்காது தமக்கு தேவையான மையமாக கணித்துள்ள காரணத்தினால் அவர்களுக்கு ஏற்ற அரசியல் தளம் ஒன்றினை உருவாக்க நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு பெற்றுள்ள கடன் தொகையை மீள செலுத்த முடியாது கடன் வாங்கிய நாடுகளிடம் மண்டியிடும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் நாளுக்கு நாள் நாடு பலவீனப்பட்டுக்கொண்டே செல்வதாகவும் அனுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு சீனாவின் பொருளாதார தலையீடு காரணமாக நாட்டின் வளங்களை இழக்கும் அளவிற்கு நாம் வந்துவிட்டோம் என்ற விமர்சனத்தை ஒரு தடவை சீன தூதுவர் எம்மை சந்தித்த வேளையில் முன்வைத்தேன்.
அதற்கு அவர் என்னிடம் கூறியது ஒன்றுதான் ‘சிறிலங்காவில் முன்னெடுக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் நாம் முன்வைத்த திட்டங்கள் அல்ல, அனைத்துமே அரசாங்கம் எம்மிடம் முன்வைத்த திட்டங்களே.அதற்கு உதவிகளை மட்டுமே நாம் செய்தோம்’ என்றார்.
எனவே சீனாவை மாத்திரம் திட்டுவது அர்த்தமற்றதாகும். அவர்களுக்கு இடமளித்த ஆட்சியாளர்களே பாரிய தவறினை செய்துள்ளனர். அவர்களை மாற்ற வேண்டியதே அவசியம் என கருதுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.