ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவை அச்சுறுத்துவதற்காக அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை என்று அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.
நாட்டின் ஜனாதிபதியொருவர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிவது சாதாரணமானதொரு விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட போதும் விஜேதாச ராஜபக்ஷ இவ்வாறு தான் செயற்பட்டார்.
இறுதி நேரத்தில் நான் விளக்கமளித்ததன் பின்னரே அவர் 20 இற்கு ஆதரவாக வாக்களித்தார். எனவே இந்த விடயம் தொடர்பிலும் அவர் சரியான தகவல்களை அறிந்து கொள்ள முயற்சித்திருக்கலாம். அவருக்கு அமைச்சு பதவி கிடைத்திருக்க வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் தனக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதற்காக இல்லாதவொன்றை கூறுவது நியாயமற்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்