தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் சேர்ந்த நடனசபேசன் லோகராசா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தில் இன்று நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே குறித்த குடும்பஸ்தர் கைதாகியுள்ளார்.
அண்மையில், இந்தியாவில் ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகளை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழில் குறித்த நால்வர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த நால்வருடன் தொடர்பினைப் பேணிய குற்றச்சாட்டிலேயே முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பஸ்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் மறுவாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டனர் என்று சந்தேகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் வடக்கில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.