கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை என, மருத்துவமனை நிர்வாகமும் தமிழக சுகாதாரத் துறையும் தெரிவித்துள்ளன.
இன்று முற்பகல் நடிகர் விவேக்கிற்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையியே நடிகர் விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்றும், தடுப்பூசியின் பக்கவிளைவினால் தான் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
இது குறித்து நடிகர் விவேக் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளனர்.
நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சுயநினைவின்றி இருந்தார் என்றும், அவரது இதயத்துடிப்பு குறைவாக இருந்ததாகவும் மருத்துவர் ராஜூ, தெரிவித்துள்ளார்.
இதயத்திற்குச் செல்லும் இடதுபுற ரத்தக்குழாயில் 100 சதவீதம் அடைப்பு இருந்ததாகவும், ஆஞ்சியோ சிகிச்சை மூலமாக அந்த அடைப்பு சரிசெய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடிகர் விவேக் ‘எக்மோ’ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார் என்றும் 24 மணி நேரம் கண்காணித்த பின்னரே, அவரது உடல்நிலை குறித்து கூற முடியும் என்றும் தெரிவித்த மருத்துவர், விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கருத்து வெளியிடுகையில், “ விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடிகர் விவேக் தானாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்றும், அதற்கும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.” என்றும் தெரிவித்துள்ளார்