கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான விசாரணை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகளும், பொது அமைப்புகள், மற்றும் தனிநபர்களும் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும், உயர்நீதிமன்றில் 21 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மனுக்களின் மீதான விசாரணை இன்று காலை தொடங்கியுள்ளது.
தலைமை நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வு இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான விசாரணைகளில், மூத்த சட்டத்தரணிகளான கனகஈஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன், விஜேதாச ராஜபக்ச உள்ளிட்ட பலரும் முன்னிலையாகியுள்ளனர்.
இந்த விசாரணைகள் மூன்று நாட்கள் வரை நீடிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.