தெற்கிலுள்ள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்கவே, வடக்கில் கைது நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“கோட்டாபய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆக முன்னரே மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அந்த எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக வட பகுதியில், யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் மற்றும் ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் வகைதொகையின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தென்பகுதியில் உள்ள எதிர்ப்பினை சமாளிப்பதற்காக சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் ஒரு நாடகமாகவே இந்தக் கைதுகளை நாங்கள் பார்க்கிறோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாவதை கட்டுப்படுத்துகிறோம், என்று சிங்கள மக்களுக்கு காண்பிப்பதற்காகவே இந்த செயற்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது அவர்களுடைய உரிமை. அந்த எதிர்ப்புக்கு உரிய காரணத்தை கண்டறிந்து சிறிலங்கா அரசாங்கம் சரி செய்ய வேண்டும்.
அதை விடுத்து, வடக்கில் புலிப் பூச்சாண்டியை காட்டி தமிழ் இளைஞர் யுவதிகளை கைது செய்வதை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்த வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.