ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸே நவால்னி (Alexei Navalny) சிறையில் உயிரிழந்தால், கடுமையான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷ்யாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வலது கால் மரத்துப்போய், முதுகுவலியால் அவதிப்படும் நவால்னிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் சில நாள்களில் அவர் இறக்க நேரிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், ‘நவால்னிக்கு (Navalny) அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை நியாயமற்றது. முற்றிலும் பொருத்தமற்றது’ என கூறினார்.
ஆனால், ரஷ்யா இதை மறுக்கிறது. கவனம் பெறுவதற்காக நவால்னி இப்படி நடந்து கொள்வதாகக் கூறும் பிரித்தானியாவுக்கான ரஷ்ய தூதர், அவரை சிறையில் சாக விடமாட்டோம் என கூறினார்.
தனது மருத்துவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறி கடந்த மாரச் 31ஆம் திகதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அவரது சிறுநீரகம் செயலிழக்கக்கூடும் எனவும், எந்நேரமும் மாரடைப்பு ஏற்படலாம் எனவும் சமீபத்திய இரத்தப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக அவரது மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.