குயின்ஸ் பார்க்கில் உள்ள அனைத்து சட்டமன்ற செயற்பாடுகளும், வரும் புதன்கிழமையுடன் மூடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சட்டமன்ற செயற்பாடுகளை மெய்நிகர் முறைக்கு மாற்றுவது குறித்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் தோன்றியுள்ளது.
தற்போதைய கொரோனா பரவல் மற்றும், அவசரகால அதிகாரங்கள் குறித்து பேசுவதை தவிர்க்க, சட்டமன்ற விவாதங்களை நிறுத்த டக் போர்ட் அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் அன்ட்ரே ஹோர்வத் (Andrea Horwath) தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தை மூடுவது தொடர்பாக முதல்வர் டக் போர்ட்டின் செயலக பேச்சாளரிடம் வினவிய போது அதுகுறித்து, எந்தக் கருத்தையும் வெளியிட மறுத்துடன், அரச தரப்பு அவைத் தலைவருடன் தொடர்பு கொள்ளுமாறும் பதிலளித்துள்ளார்.
அதேவேளை, அரசதரப்பு அவைத் தலைவர் போல் கலான்ட்ரா (Paul Calandra) இந்த வாரம் சட்டமன்றம் மூடப்படும் என்ற தகவலை நிராகரித்துள்ளார்.
பாதுகாப்பான முறையில் சட்டமன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.