ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையை இந்தியா புறக்கணித்தாலும், தன் நிலைப்பாட்டை இந்தியா எழுத்துப் பூர்வமாக அறிவித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், சிறிலங்கா அரசு சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என அ.தி.மு.க. ராஜ்சபா உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ள நிலையில், அதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
குறித்த கடிதத்தில், ‘சிறிலங்கா தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட உறுதியான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களுடன் அதிகாரப் பகிர்தலை உறுதி செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டத்தின்படி தமிழர்களுக்கு வழங்கப்படுவதாக வாக்குறுதி அளித்திருந்த அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை சிறிலங்கா அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் கேட்கும் சமத்துவம், சம உரிமை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் நட்புறவு நடவடிக்கைகளில், இலங்கை அரசு ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.