மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்தும் யோசனைக்கு, ஆளும்கட்சி நாடாளுமன்றக் குழுவின் ஏகமனதாக இணக்கம் வெளியிட்டுள்ளது.
ஆளும்கட்சியின் நாடாளுமன்ற குழு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடியபோதே, இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
தொகுதி ஒன்றில் மூன்று பேரை முன்னிறுத்தி, அவர்களில் மக்களின் ஆதரவை அதிகம் பெறும் நபருக்கு, அந்த தொகுதியின் உறுப்பினராவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் குழுவிலிருந்த அனைவராலும் அந்த யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சிறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவானோரும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இளம் உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டுமாயின் இவ்வாறான முறைமை இருக்க வேண்டும். இல்லாவிட்டால், தொகுதி ஒன்றில் எல்லா சந்தர்ப்பத்திலும் ஒருவருடைய பெயரே முன்வைக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பில் ஏனைய சிறுபான்மை கட்சிகளிடம் ஆலோசனைகள் பெறவுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.