ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார வெளியிட்ட கருத்துக்களை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சுமார், 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் அடங்கிய முறைப்பாட்டுப் பத்திரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி தொடர்பில் தம்மிடம் இருப்பதாக கூறும் ஆதாரங்களை, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வெளிப்படுத்த வேண்டும் எனவும், இது தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் தேவையானது என்றும் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் குறித்து அவர்கள் அறிந்திருக்கும் இரகசியங்களை வெளிப்படுத்த வேண்டும் எனவும், இதனை வைத்துக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் அரசியல் இலாபம் தேட முனைவதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டினை, சஞ்ஜீவ எதிரிமன்ன, பிரமித பண்டார, திஸ்ஸ கெட்டியாராச்சி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர்