யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, கடந்த ஜனவரி 8ஆம் நாள், பல்கலைக்கழக நிர்வாகத்தினால் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டது.
இதற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்திருந்தது.
அதனையடுத்து, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா, புதிய நினைவுத் தூபிக்கான அடிக்கலை நாட்டி, கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வந்தன.
இந்த நிலையில், இன்று காலை நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது.
இதையடுத்து, நினைவுத்தூபியின் பிரதான சுடர் ஏற்றப்பட்டு, மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டதுடன், மலர் அஞ்சலியும் இடம்பெற்றுள்ளது.
இந்த நினைவுத் தூபியை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.