கொரோனா தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல், வெளியிடப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சினால் இந்த வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகளுக்காக, வீட்டிலிருந்து வெளியே செல்ல இரண்டு பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேருந்து, தொடருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துகளில், இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் பயணிக்க முடியும்.
மகிழுந்துகளிலும், முச்சக்கர வண்டிகளிலும் பயணிக்கக்கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய வாகனங்களில், இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுப்படுத்தப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களில், தேவைக்கேற்றவாறு பணிக்குழாமினரை சேவையில் ஈடுபடுத்த முடியும்.
அத்துடன், பல சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்து பணிபுரிவதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகள், முன்பள்ளிகளில் 50 சதவீதமான மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதுடன், மேலதிக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருமண நிகழ்வுகளின் போது, மண்டபங்களின் கொள்ளளவில், 50 சதவீதமானோருக்கு அனுமதி வழங்கப்படுவதுடன், 150 பேருக்கு மேற்படாதவகையில் நிகழ்வுகளை நடத்த வேண்டும் எனவும் சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.