யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பனவற்றில் 636 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே, 12 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளுக்கும், கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த, அரச அதிகாரி ஒருவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் திருநெல்வேலி பாரதிபுரம் தொற்றாளர்களுடன் தொடர்புடைய மூவருக்கும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது