இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாட் பதியுதீன் ஆகியோரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகளுக்கு, உதவியாகவும் உடந்தையாகவும் இருந்தனர் என்ற குற்றச்சாட்டில், இன்று அதிகாலை வெள்ளவத்தையில் வைத்து றியாட் பதியுதீனும், பௌத்தலோக மாவத்தையில் உள்ள இல்லத்தில் வைத்து றிஷாட் பதியுதீனும் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.
இவர்கள் நேரடி மற்றும் விஞ்ஞானபூர்வ ஆதாரங்களின் அடிப்படையில், கைது செய்ய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் கைது செய்யப்படுவதற்கு முன்னர், சபாநாயகரிடம் அனுமதி பெறப்பட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.





