நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் கைது செய்யப்படுவதற்கு முன்னர், சபாநாயகரின் அனுமதியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக் கொள்ளவில்லை என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
றிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னரே, அவர் கைது செய்யப்பட்டமை குறித்து சிறிலங்கா காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டதாக, சபாநாயர் மகிந்த யாப்பா அபேவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கு முன்னர், சபாநாயகருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என எந்த சட்டமும் கிடையாது என்றும், அது வெறும் சம்பிரதாயம் மட்டுமே என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை காவல்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளை, றிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரரும், அரசியல் நோக்கத்துடனேயே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, அவர்களின் சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் தெரிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்களும் அனுதாபிகளும் அமைதியாக இருக்குமாறும், புனித ரமழான் நோன்பை தொடருமாறும், அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.