கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மோசமாக அதிகரித்துள்ள போதிலும், பாடசாலைகளை மூடுவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என சிறிலங்காவின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் இளையவர்களை அதிகளவில் பாதித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், சுகாதார அமைச்சினால் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய உயர்கல்வி நிறுவனங்கள், மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
எனினும், பாடசாலைகளில் 50 வீத மாணவர்களுடன் இயக்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி அளித்துள்ளது.
எவ்வாறாயினும் தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நிலைமைகள் மோசமடைந்தால், பாடசாலைகளை மூடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, திருகோணமலை, உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில், பாடசாலைகளில் மாணவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.