கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள பிரதேசங்களில், அத்தியாவசியப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி வழங்கலில் மீள் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்ராறியோ மாகாண கொரானா விஞ்ஞான ஆலோசனை சபை தெரிவித்துள்ளது.
அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளிலும், அத்தியாவசிய பணியாளர்களுக்கும், தடுப்பூசி வழங்கலில் முன்னுரிமை அளிப்பது கொரோனா தொற்றை கணிசமாகக் குறைக்கும் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.
ஏனைய பகுதிகளை விட ரொறன்ரோவில், சுகாதாரப் பணிகள் அல்லாத அத்தியாவசிய பணியாளர்கள் மூன்று மடங்கு அதிகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம், 16 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மத்தியில் தொற்றைக் குறைக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.