சிறிலங்காவில் பரவல் ஆரம்பித்த காலம் முதல் தற்போது வரையிலான காலத்தில் நாளொன்றில் அதிகமானோருக்கு இன்று தொற்றுறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் தகவல்களின்படி இன்றைய தினம் 997 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இதற்கமைய நாட்டில் தொற்றுறுதியானோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து,376 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 976 பேருக்கு தொற்றுறுதியாகி இருந்தமையே நாளொன்றின் அதிகபட்ச தொற்றுறுதியாக இருந்தது. கடந்த 23ஆம் திகதி 969 பேருக்கு தொற்றுறுதியாகியிருந்தது.
கொரோனா தொற்று அதிகரிப்பை தொடர்ந்து கம்பஹா மற்றும் களுத்துறையில் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை திருகோணமலையில் கிராமசேவகர் பிரிவொன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இன்று இரவு 8 மணி தொடக்கம் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.