சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல், இலக்கை நோக்கியே தொடர்ந்து பயணிப்போம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இன்று நடந்த தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவேந்தல் நிகழ்வில், கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டில் பாரிய ஆட்சி மாற்றமொன்று ஏற்பட வேண்டும். அனைத்து மக்களுக்கும் இன, மத பேதமின்றி சகல விதமான உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே தந்தை செல்வா 1949ஆம் ஆண்டு கட்சியை ஆரம்பித்தார்.
அவரது கொள்கைகளுக்கு அமையவே கடந்த 70 வருடங்களாக நாம் பயணித்து வருகின்றோம். அதிகளவான கட்சிகள் அவரது நிலைப்பாட்டினை ஏற்றுக்கொண்டுள்ளன. எதிர்வரும் காலங்களில், எங்களது இலக்கில் இருந்து விலகாமல், சில்லறை சலுகைகளுக்கு அடிபணியாமல் இலக்கை நோக்கி பயணிப்பதன் ஊடாக மாத்திரமே நாம் வெற்றியடைய முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்