முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும், மேதினத்தையும் தடுக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக ஜேவிபியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன், குற்றம்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கம், எமது மே தின நிகழ்வுகளை தடை செய்வதற்கு பல்வேறு வழிகளிலும் முயன்று வருகின்றது.
எந்தத் தடை வந்தாலும் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் எமது மே தினத்தை நடத்துவது என உறுதி கொண்டுள்ளோம்.
மே மாதம் என்பது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் மேதின நிகழ்வு இடம்பெறும், ஒரு விசேடமான மாதமாகும்.
எனினும், சிறிலங்கா அரசாங்கம், கொரோனா என்ற ஒரு மாயையை உருவாக்கி, மே தினம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை தடுப்பதற்கு, நடவடிக்கை மேற்கொள்கிறது.
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்கள் வேறுநாட்டு மக்களில்லை. எதிரி நாட்டு பிள்ளைகள் இல்லை. எங்களது சகோதரர்கள்.
இவர்களை நினைவு கூர்வதற்கு அந்த மக்களுக்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமையை சிறிலங்காஅரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. ஜேவிபி இதனை வன்மையாக கண்டிக்கிறது.
உயிரிழந்தவர்களை நினைவு கூருவதை யாரும் தடுக்க முடியாது. எனவே மக்களின் உரிமையை சிறிலங்கா அரசாங்கம் நிலைநிறுத்த வேண்டும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





