கொரோனா ஒத்துழைப்பு மற்றும் தொற்றுப் பரவலுக்குப் பின்னரான பொருளாதார மீட்சி தொடர்பாக, சிறிலங்கா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் பங்கேற்கும், கூட்டத்துக்கு சீனா ஏற்பாடு செய்துள்ளது.
தெற்காசிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான இந்தக் கூட்டத்தை சீன வெளிவிவகார அமைச்சர், வாங் யி ஒழுங்கு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
மெய்நிகர் முறையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கொரோனா தொற்றைக் கையாளுவது மற்றும், தொற்றுக்குப் பின்னரான காலகட்டத்தில் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதை இலக்காக கொண்டு, புதிய அமைப்பு ஒன்றைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே சீன வெளிவிவகார அமைச்சு இந்தக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்துள்ளது.
தெற்காசிய நாடுகளில், கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகின்ற நிலையிலும், கொரோனா தடுப்பு மருந்துகளின் ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்துள்ள நிலையிலும் சீனா இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதேவேளை, சீன பாதுகாப்பு அமைச்சர், ஜெனரல் வெய் பெங்கி இன்று பங்களாதேசுக்குப் பயணம் மேற்கொண்டு விட்டு, நாளை சிறிலங்காவுக்கு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது