தனது மகனின் பிறந்த நாளுக்கு போதைப்பொருள் பாவனையுடன் களியாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்த சர்வதேச பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை உள்ளிட்ட 15 இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை – பாமன்கடையிலுள்ள இரு மாடி சொகுசு வீடு ஒன்றில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.
18 வயதான தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டே இவ்வாறு விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்ததாக குறித்த ஆசிரியை காவல்துறை விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
இதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் சந்தேக நபரான ஆசிரியையின் இரு மகன்மாரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டபோது குறித்த வீட்டின் மேல் மாடியில் சிலர் பாடலுடன் நடனமாடிக் கொண்டிருந்ததாகவும், ஏனையோர் போதைப்பொருளை பாவித்துக் கொண்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
42 வயதுடைய குறித்த ஆசிரியையும், 18 – 23 வயதுக்கு இடைப்பட்ட ஏனைய இளைஞர், யுவதிகளும் கைது செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்களிடமிருந்து ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அத்துடன், ஐஸ் போதைப்பொருள் 15 கிராம், 2450 மில்லி கிராம் கஞ்சா, ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்துவதற்கான உபகரணங்கள் ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள் தெஹிவளை வெள்ளவத்தை மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் உள்ள சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்பவர்கள் என்பது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.