வடக்கு மாகாணத்தில் தற்காலிக சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றிய 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் தர வேண்டும் என கோரி இன்றைய தினமும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் அருகில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யுத்த காலத்தில் சேவையாற்றிய 840 பேர் சுகாதாரத் தொண்டர்களாக வடக்கு மாகாண சபையினால் உள்வாங்கப்பட்டனர்.
முன்னாள் வடமாகாண ஆளுநர் காலத்தில் 130 சுகாதார தொண்டர்கள் தற்காலிகமாக கடமையாற்றிய நிலையில், அவர்களையும் இணைத்து 970 பேருக்கு நிரந்தர நியனம் வழங்குமாறு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் கோரியுள்ளனர்.
சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத் தேர்வு இரண்டு தடவைகள் இடம்பெற்ற நிலையில் அதில் ஊழல்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இறுதி யுத்தத்தின் போது கடமையாற்றிய சுகாதார தொண்டர்கள் இறுதியாக இடம்பெற்ற நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படவில்லை.
சகல ஆவணங்களும் ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட நிலையில், நேர்முகத் தேர்விற்கு தம்மை அழைக்காமை பெரும் ஏமாற்றத்தைத் தருவதாக போராட்டத்தில் கலந்து கொண்டோர் கவலை வெளியிட்டனர்.
எனவே வடமாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக நிரந்தர நியமனம் கோரி விண்ணப்பித்த 970 பேருக்கும் குறித்த நியமனத்தை பாகுபாடின்றி தர வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.