முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் சிறிலங்கா இராணுவத்தினரின் துணையுடன் நேற்றிரவு பௌத்த பிக்குகள் பிரித் ஓதி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் புராதன பௌத்த விகாரை சிதைவுகள் உள்ளதாக கூறி, தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டிருந்த நிலையிலேயே நேற்று இரவு இந்த வழிபாட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால இந்த நிகழ்வுக்காக அங்கு சென்றுள்ளார் என்றும், அந்தப் பகுதிக்கு ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் அனுமதிக்கப்படாமையால் முழுமையான விவரங்களைப் பெறமுடியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஒன்றுகூடி வழிபாடுகள் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை மீறி, மாவட்ட நிர்வாகத்துக்கோ, சுகாதாரத் தரப்பினருக்கோ தெரியப்படுத்தாமல், நூற்றுக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினர் மற்றம் பெரும் எண்ணிக்கையான பௌத்த பிக்குகள் இந்த வழிபாடுகளில் பங்கேற்றுள்ளனர்.
முல்லைத்தீவு படைத் தலைமையக கட்டளை அதிகாரி மற்றும் சுமார் 30 பௌத்த பிக்குகள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் இந்த வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து இன்று குருந்தூர் மலையில், பௌத்த ஆலயத்தை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளதாகவும், கூறப்படுகிறது.





